இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Saturday 21 May 2011

15 அடிக்கு 10 அடி அறையில் முடங்கியது கனிமொழியின் வாழ்க்கை!

டெல்லி: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனிமொழி திஹார் சிறையின் மகளிர் சிறைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் எந்த வசதியும் இல்லாத அறை அது.

43 வயதான கனிமொழியின் சிறை வாழ்க்கை குறித்த ஒரு பார்வை...

நேற்று மாலை திஹார் சிறைக்கு கனிமொழி கொண்டு செல்லப்பட்டார். கண்கலங்கிய நிலையில் பாட்டியாலா கோர்ட் லாக்கப்பிலிருந்து போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது அவர் மீண்டும் கலங்கினார்.

வேனில் அவருக்குப் பாதுகாப்பாக வந்த திஹார் சிறைக் காவலர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் கனிமொழியுடன் தமிழில் பேசவே சற்று ஆறுதலடைந்தார் கனிமொழி. அவர்களுடன் தமிழில் உரையாடியபடி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

நீங்கள் எந்த ஊர், எப்போது முதல் இங்கு பணியாற்றுகிறீர்கள், டெல்லியில் வேலை எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டுக் கொண்டே வந்தாராம் கனிமொழி.

சிறைக்கு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு சிறை விதிமுறைகள் விளக்கிச் சொல்லப்பட்டது. அதை அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பின்னர் சிறை விதிமுறைகளின்படி சில ஆபரணங்களை அவர் கழற்றிக் கொடுத்து விட்டார். அவரது முகத்திற்கு அழகூட்டும் மூக்குத்தியும் அதில் ஒன்று.

மூக்குக் கண்ணாடி, சிறிய கைப்பை, சில புத்தகங்களை மட்டும் உடன் வைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை சிறைக் காவலர்கள் 8ம் எண் அறைக்குக் கொண்டு சென்று விட்டனர். அது மிகச் சிறிய அறை. அந்த அறையில் ஒரு கழிப்பறை மற்றும் படுத்துத் தூங்குதவற்காக ஒரு சிறிய மேடை போன்ற இடம் ஆகியவை மட்டும் உள்ளன.

கனிமொழியின் கண்ணியத்தைப் பாராட்டிய சிபிஐ நீதிபதி அவர் தொலைக்காட்சி வைத்துக் கொள்ளலாம், மின்விசிறி சலுகை தரலாம் என சில சலுகைகளை அறிவித்திருந்தார். அதன்படி கனிமொழி டிவி, செய்தித் தாள்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்விசிறி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறைக்குள்தான் தனது சிறை வாழ்க்கையை கழித்தாக வேண்டும் கனிமொழி. இங்கேயே குளித்துக் கொள்ளலாம். ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு குளித்துக் கொள்ளலாம். கழிப்பறை உள்ள பகுதியில்தான் அவர் குளிக்க வேண்டும். அதற்கும், தூங்கும் இடத்திற்கும் இடையே தடுப்பு ஏதும் கிடையாது. துணியால் மறைத்தபடி அதைப் பிரித்துக் கொள்ளலாம்.

கனிமொழி தென்னிந்திய உணவு வகைகளை வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிட நீதிபதி அனுமதித்துள்ளார். மருந்துகளையும் அவருக்குக் கொண்டு வந்து கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான சாப்பாட்டை சாப்பிட கனிமொழிக்கு தடை இல்லை.

இருப்பினும் இவை தவிரகனிமொழிக்கென்று வேறு எந்த சிறப்புச் சலுகையும் தரப்பட மாட்டாது. வழக்கமான கைதிகளைப் போலவே அவர் நடத்தப்படுவார் என்று சிறையின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குப்தா கூறியுள்ளார். மேலும், அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழி விஐபி கைதி என்பதால் அவரைத் தாக்கி தங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்ள சிலர் முயலலாம் என்பதால் அது நடந்து விடாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அறைக்கு முன்பு 24 மணி நேர பாதுகாப்பு தரப்படும் என்றும், கனிமொழியுடன் ஒரு பாதுகாவலர் எப்போதும் இருப்பார் என்றும் குப்தா கூறியுள்ளார்.

தனது அறை உள்ள பகுதியையொட்டியுள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் கனிமொழி பேசத் தடை இல்லை. அதேசமயம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளவர்களுடன் பேச அவருக்கு அனுமதி கிடையாது.

கனிமொழி விசாரணைக் கைதி என்பதால் அவர் வழக்கமான உடைகளை அணிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நாள் இரவை கனிமொழி நல்ல தூக்கத்தின் மூலம் கழித்தாராம். இரவு 11 மணிக்குத் தூங்கிய கனிமொழி காலை ஐந்தரை மணியளவில் எழுந்துள்ளார். கோர்ட்டுக்குக் கிளம்ப தயாரானார்.

நேற்று இரவும், இன்று காலையும் அவர் சிறையில் கொடுத்த உணவையே சாப்பிட்டுள்ளார்.

ஜாமீன் கிடைக்கும் வரை இந்த குறுகிய அறைக்குள்தான் கனிமொழி தங்கியிருக்க வேண்டும்.



நன்றி : thatstamil.com

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More